ஊர் தலைவர் வரலாறு

 


ஏமாளியின் குமுறல்.....


என் தாத்தனும், அவன் தாத்தனும் ஒன்றாகத்தான் தோட்ட வேலை கற்றனர்.

ஆளுக்கு ஒரு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்தனர்,அதில் வந்த வருமானம் கொண்டு வாழ்வை ஓட்டினர் .

ஆசை அடங்கா அவன் தாத்தானோ,அருகில் இருந்த கேப்பாரற்று கிடந்த நிலத்தினை கையகப்படுத்தினான்.

என் தாத்தானோ,பேராசை கொள்ளாது,தனக்கானது போதும் என்ற மனப்பாங்கில் இருந்து விட்டார்.

நாளடைவில் ஆளுக்கு ஒரு ஏக்கர் என இருந்த நிலம் அவன் தாத்தனுக்கு ஆறு ஏக்கராக மாறியது,வருமானம் ஏறியது.

அவன் அப்பன் பள்ளிக்கு சென்றான், என் அப்பனோ அந்த ஆறு ஏக்கரில் பணிக்கு சென்றான்.

அவன் அப்பன் வீட்டில் இருந்த படியே விவசாயம் செய்தான், என் அப்பனோ  வீட்டிற்கு வர மறந்தான்.

அதிக வருமானம் , அவன் அப்பனுக்கு  செல்வாக்கையும் மரியாதையும் வாங்கிக்குடுத்தது.

அந்த செல்வாக்கு அரசியல் அதிகாரத்திற்கு விதை போடா, சுய சமூக பெருமை பேசி எங்களையும் மூளை சலவை செய்து ஊர் தலைவராகி விட்டான். 

முப்பது இலட்சம் முதலீடு செய்து வந்த பதவி என்பதால், முடிந்தளவு இலாபம் சம்பாரிக்கும் முனைப்பில் அவன் அப்பன் இரவு பகல் பாராது , அயராது பாடுபட்டான்.

வருமானம் பத்தாத என் அப்பனோ, அவன் அப்பனிடம் அதிகமில்லாமல் அஞ்சு வட்டிக்கு கடன் வாங்கி தன் ஒரு ஏக்கர் நிலத்தில் முதலீடு செய்தான்.

கடன்வாங்கி முதலீடு செய்த இந்த ஆண்டுதான் இயற்க்கை தன் கருணை மழையை பொழியவேண்டுமா?

நிலம் முழுதும் நீரால் நிரம்பியது.

இதை அறிய வாய்ப்பாக கருதிய அவன் அப்பன் , தன் அதிகாரத்தை பயன்படுத்தி இயற்க்கையால் ஏற்பட்ட இழப்பினை காண மந்திரியை வரவைத்தான்.

வந்த மந்திரி காட்டிற்குள் இறங்காமல் , களத்து மேட்டில் நின்றவாறே கணக்கீடு செய்து, ஏக்கருக்கு ஏழாயிரம் இழப்பீடு தருவதாக அறிவித்து சென்றார்.

அறிவிப்பு மட்டும் செய்துவிட்டு சென்ற மந்திரி , திரும்ப இந்த திசை நோக்கி வரவேயில்லை.

என்னதான் இருந்தாலும் ஊர் தலைவர் என்ற முறையில், மூன்று ஆண்டுகளில், அறிவித்ததில் ஏக்கருக்கு நாலாயிரத்தை பெற்று தந்துவிட்டான்.மீதி பணம் காந்தி கணக்கு.

அறிவித்தது ஏழாயிரம், வந்தது நாளாயிரம்,அனால் முதலீடு செய்தது இருபதாயிரம்.

நிவாரண தொகைக்கான அலைச்சலில்,கடந்த மூன்று ஆண்டுகளாக கடனை சரிவர கட்ட முடியவில்லை.

வட்டிக்கு வட்டி ஏறி இப்போது முழு நிலமும் கடனில் மூழ்கிவிட்டது.

பெருந்தன்மையாக கடனுக்கு ஈடாக நிலத்தினை பெற்றுக்கொண்டான் அவன் அப்பன்.உள்ளதையும் இழந்த என் அப்பன் தினக்கூலி ஆனான்.

பிறகு ஊரக வளர்ச்சி நிதியை வைத்து அவனுக்கு தொழில் அமைத்து கொடுத்தான்.

வட்டியில்லாமல் வழங்க வேண்டிய விவசாய கடன்களை கூட்டுறவு அமைப்பிலிருந்து தான் பெற்றுக்கொண்டு , அதிகமில்லாமல் அஞ்சு வட்டிக்கு மட்டுமே சிறு குறு விவசாயிகளுக்கு வழங்கினான்.

என் தாத்தனும் , அவன் தாத்தனும் சம நிலையில் தொடங்கிய வாழ்வியல்,மூன்று தலைமுறைக்குள் எனக்கும் அவனுக்கும் இடையே ஏற்படுத்திய பொருளாதார இடைவெளி முன்னூறு மடங்கு.

ஏமாற்றுதல் என்பது திறமை,சாமர்த்தியம் என கூறும் காலகட்டத்தில்,நாங்கள் எங்கு தவறவிட்டோம் என தெரியவில்லை.


-ந.மகேந்திரன் 



Post a Comment

0 Comments