வழக்கத்திற்கு மாறாக வீட்டிலிருந்தே விதி தன் விளையாட்டை ஆரம்பித்துவிட்டது.காலை எழும்போதே, மின்சார துண்டிப்பு என்னை குளிர் நீரில் குளிபாடச்செய்துவிட்டது.
அலுவலகத்தில் அன்றாட தாமதம், என்ற அவ பெயரை மாற்ற அடித்து பிடித்து சற்று முன்கூட்டியே கிளயம்பிய இன்று தான் , என் இருசக்கர வாகனம் பாதி வழியில் பழுதடையவேண்டுமா?
பழுதடைந்த வாகனத்தை தள்ளிக்கொண்டே நகர்ந்த நான் ,வெகுதூர பயணத்திற்கு பின் இயந்திர சரிபார்ப்பு நிலையத்தை வந்தடைந்தேன்.
நான்கைந்து வீடுகள் மட்டுமே உள்ள அவ்வூரில் இன்று என்னவோ ஆறேழு வாகனங்கள் எனக்கு முன் வரிசையில் நின்றன.
அகர வரிசை படி அனைத்தையும் முடித்துவிட்டு, என் வாகனத்தை நெருங்கும் போதா? வரவேண்டும் அவனுக்கும் அவனது மனைவிக்கும் வாய்த்தகராறு.கைபேசியில் பேச ஆரம்பித்தவன் பேசி முடிக்க வெகுநேரம் ஆயிற்று.
ஒருவழியாக எனது வாகனத்தை சரிபார்க்க, விழுந்தது பேரிடி.... வாகனத்தை சரி செய்ய தேவையான உதிரி பாகங்கள் இங்கில்லை. அது நகர்புறத்தில் இருந்து வரவைத்து சரி செய்ய ஒரு நாள் ஆகும் , ஆகையால் நீ கிளம்பு என கழுத்தை பிடித்து தள்ளாதவாறு மரியாதையாக கூறினான்.
வாகனத்தை அவனிடமே ஒப்படைத்துவிட்டு , பேருந்து நிறுத்தம் நோக்கி நகர்ந்தேன். காலதாமதத்திற்க்கான காரணத்தை அலுவலகத்தில் தெரிவிக்க விரும்பி, கைபேசியில் அழைத்தேன் என் உயரதிகாரிக்கு.
அவர் குடும்பத்தில் என்ன பிரச்னை என தெரியவில்லை அனைத்தையும் என்னிடம் கொட்டிவிட்டான்,இறுதியாக ஒரு மணி நேரம் மட்டுமே கிடைத்தது.
இன்றைய நாள் இதைவிட மோசமாக வாய்ப்பில்லை என்ற கர்வத்தோடு வந்த எனக்கு காலம் தந்த பரிசு, இன்னும் சிலமணி நேரத்திர்ற்கு இங்கு பேருந்து கிடையாது என்பதே...
அட போங்கடா ! என்று தலையில் கைவைத்து பேருந்துநிறுத்த இருக்கையில் அமர்ந்தேன்.
சற்றென்று மாறியது சூழ்நிலை ,
நீண்ட நேர வெயிலின் தாக்கத்தை குறைக்க அவ்வப்போது வரும் கருமேகங்கள் போல ,சில்லென்ற காற்று போல,சிறு சிறு மழைத்துளி போல,இன்றைய நாள் என் மீது நடத்திய கொலைவெறி தாக்குதலின் இடைவேளை நேரமிது.
கல்லூரி பேருந்தை தவறவிட்ட பெண் ஒருத்தி வந்துநின்றாள் என்னருகில்,
நீண்டதூர நடைபயண களைப்பு, கல்லூரிக்கு காலதாமதமான பயம்,அதிகாலை முதலே அதிக வேலை வாங்கியதால் வீட்டினருடனான கோவம்,தனிமையான பேருந்துநிறுத்ததில் அழகிய வாலிபனான என்னுடைய இருப்பு என, பலவித உணர்ச்சிகளின் மொத்த வெளிப்பாடாய் நின்றிருந்தாள்.
அவளை காணுகையில் இதுவரை நடந்தேறிய நிகழ்வுகளை முற்றிலும் மறந்தேன்.துறு துறு பார்வையும்,பெண்மைக்கே உரித்தான நாணமும்,அவள்மீதான என் ஈர்ப்பை அதிகரித்து கொண்டே போனது. என் பார்வை வேறெங்கும் திரும்பவில்லை, திருப்புவதற்கான தேவையும் இல்லை.
பேருந்தை எதிர்பாத்து அவள் நோக்கும் பொழுது, இல்லை, அவளது கருவிழிகள் என்னை கடந்து செல்லும் பொழுது,என் உயிர் உடலை விட்டு பிரிந்து செல்வதை உணர்ந்தேன்.
கண்ணிமைக்காமல் நான் பார்ப்பது அவளுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது என்பதை என்னால் உணரமுடிந்தது. ஆகையால் வேறு வழியின்றி சற்று விலகி நின்றேன்.
எனது இந்த நடவடிக்கை என்மீதான அவளது மதிப்பீட்டை மாற்றியது.பேருந்து எப்போ வரும் என்ற எதிர்பார்ப்பில் அவள் ,ஏன் வரவேண்டும் என்ற எதிர்ப்பில் நான், நின்றிருக்க, இவன் பணிக்கு வருவானா மாட்டானா என்ற கோபத்தில் என் உயரதிகாரி திரும்ப திரும்ப கைபேசியில் அழைக்க,
கனவினை கலைத்திட மனமில்லாது கைபேசி அழைப்பை புறக்கணித்து நின்றிருக்க, வந்தான் பேருந்து வடிவில் ஒரு எமன்.
காத்திருப்பு முடிந்து இருவரும் பேருந்தில் ஏறினோம், பெண் என்ற அடிப்படையில் பேருந்து இருக்கை வழங்கப்பட்ட்டது அவளுக்கு.ஆண் என்பதால் வரவேற்பு இல்லாது பேருந்து வாசலிலேயே நின்றுவிட்டேன்.
இருக்கையில் அமர்ந்த அவள் இரண்டு முறை திரும்பி பார்த்தாள், அது எனக்கானது அல்ல நடத்துனரிடம் பயண சீட்டை பெறுவதற்காக.
பயண சீட்டை பெற்ற பிறகும் அவளது பார்வை என்னை சுற்றியே வர , நான் முன் பின் திரும்பி பார்த்து முழுவதுமாக சரிபார்த்துவிட்டேன் , எனக்கானதே அந்த பார்வை.
அடிக்கடி அவள் என்னை பார்க்க, என்னுள் ஏகப்பட்ட சிந்தனைகள் தோன்ற,
அவளின் புன்சிரிப்பும்,நாணமும்,இந்த பயணத்தை மேலும் மெருகேற்றியது.
இறுதியாக பேருந்து அவளின் கல்லூரியை வந்தடைந்தது.இறங்க மனமில்லாவிட்டாலும் கட்டாயத்தின் பேரில் அவள் இறங்க, அவளுடனே இறங்கிவிடலாம் என்று மனமிருந்த போதிலும் கட்டாயத்தின் பேரில் வேறு வழியின்றி பயணத்தை தொடர்ந்தேன்.
இன்றைய நாளில் எவ்வளவோ மோசமான நிகழ்வுகள் நிகழ்ந்திருந்தாலும்,அதற்க்கு மத்தியில் சில அழகிய தருணங்களும் வந்து போயிருக்கிறது. இதிலிருந்து வாழ்க்கை கூறும் பாடம் யாதெனில், இன்று பொழுது விடிந்தது முதல் நடந்த அணைத்து இன்னல்களும் இவளுடனான அந்த அழகிய தருணத்தை உண்டாக்குவதற்காக கூட இருக்கலாம். நடந்த எல்லாவற்றையும் ஏற்க கற்றுக்கொள்.யாருக்கு தெரியும் அடுத்த நொடி நம்மை எவ்வாறு ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் என்று.
-ந.மகேந்திரன்

0 Comments