கால சக்கரம்.....

 


கவரிமான்சோலை கிராமத்தில் வாழ்ந்து வந்த பாண்டியன், தன் மனைவியுடன் விறகுவெட்ட காட்டிற்குள் சென்றான்.வழக்கமாக  உணவுண்ணும் இடத்தில் மதிய உணவை முடித்துவிட்டு, இருவரும் விறகுவெட்ட ஆரம்பித்தனர். அப்பொழுது தவறுதலாக பாண்டியனின் கோடாளி,அவன் மனைவி தலையில் பட்டுவிட, இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அங்கேயே இறந்து போனாள்.

தன் மனைவி இறப்பிற்கு நாமே காரணமாகிவிட்டோம் என்ற குற்றவுணர்வு நாள்தோறும் அவனை காயப்படுத்திக்கொண்டே இருந்தது.மனதளவில் மிகப்பெரிய பாதிப்பை அடைந்தான்.அதை கண்ட அக்கம் பக்கத்தினர், அவனுக்கு ஒரு அறிவுரை வழங்கினர். நீ வழக்கமாக விறகு வெட்ட செல்லும் காட்டின் மையப்பகுதியில்,நீர்வீழ்ச்சியின் கீழ் ஒரு சிவலிங்கம் உள்ளது.அங்கு சென்று உன் மனக்கவலையினை கொட்டு, ஓர் தீர்வு நிச்சயம் கிடைக்கும் என்றனர்.

சரி என அவனும் அங்கு விரைந்தான்.மிகுந்த பாசமும் அன்பும் வைத்திருந்த மனைவி இறப்பிற்கு காரணமானதால்,மனம் திறந்து கவலைகளை கொட்ட தொடங்கினான்.நாட்கள் நகர்ந்தாலும்,வாரங்கள் கடந்தாலும் அவன் கவலை முடிவிலாது தொடர்ந்தது.காலம் கடக்க கடக்க, பொறுமையிழந்த சிவன் , பாண்டியன் முன் தோன்றினார்.

சிவன் தோன்றிய பின்பு அவன் புலம்பல் இன்னும் அதிகரித்து விட்டது.தன்னை பார்த்த பின்பும் கூட இவன் கவலைக்கு முடிவில்லையே என அதிர்ந்து போன சிவன், பாண்டியனிடம் உனக்கு என்ன வேண்டும், என்ன செய்தால் உன் புலம்பல் தீரும் என கேக்க, அதற்கு பாண்டியன் என் மனைவி மீண்டும் உயிர்பெற வேண்டும் என கேட்டான்.

சற்று யோசித்த பின், சரி அப்படியே ஆகட்டும்,அவள் இறந்த இடத்திற்கு செல் என்று கூறிவிட்டு மறைந்துவிட்டார்.பாண்டியனும் கடைசியாக இருவரும் விறகு வெட்டிய இடத்திற்கு வேக வேகமாக ஓடினான். சில மாதங்களுக்கு முன் இறந்து கிடந்த இடத்தில மீண்டும் உயிர்பெற்று நின்றாள். மிகுந்த ஆனந்தம் கொண்டாந்தான் பாண்டியன்.சிவபெருமானை கண்டபோது கூட இந்தளவு மகிழ்வுறவில்லை  பாண்டியன்.

காட்டினுள் இருந்து பாண்டியனும், அவனின் மனைவியும் வருவதை கண்ட ஊர் மக்கள் திகைத்து நின்றனர். அனைவரும் அந்த சிவலிங்கத்தை நோக்கி பறந்தனர்.ஆனால் அவர்கள் யாருக்கும் தெரியாது பாண்டியனின் அன்பு ஆகச்சிறந்தது என்று.ஏற்கனவே மனைவியின் பிரிவை உணர்ந்த பாண்டியன், அவளை வீட்டிலேயே விட்டுவிட்டு அவன் மட்டும் தனியே காட்டுக்கு சென்றான்.தனி ஒரு ஆளாய் அணைத்து வேலைகளையும் பார்த்தான்.நாள்முழுதும் தனிமையில் இருப்பதால் பேச்சு துணைக்கு அக்கம் பக்கத்தினருடன் நெருங்கி பழகினாள் பாண்டியனின் மனைவி. இதுவரை நெருங்கி பழகாதவளின் திடீர் பழக்கம், ஊருக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.பலரும் பலவிதமாக கட்டுக்கதைகளை பேசத்தொடங்கினர்.

காலப்போக்கில் பாண்டியனின் காதிற்கும் இச்செய்தி செல்ல,சந்தேக பார்வை தொடங்கியது.ஒருநாள் விறகு வெட்டி, சந்தையில் விற்றுவிட்டு வீடு திரும்பும் பொழுது,பக்கத்து வீட்டுகாரர் தன் மனைவியுடன் பேசிக்கொண்டிருப்பதை பார்த்து விடுகிறான்.இதுவரை காதினால் மட்டும் கேட்ட செய்தியை இப்பொழுது கண்களால் கண்டுவிட்டான்.ஏற்கனவே ஆழ்மனதில் இருந்த சந்தேக தீப்பொறியில் இப்பொழுது எண்ணெய் கொட்டிவிட்டது.

ஆத்திரத்தில் இருவரையும் தாக்க ஆரம்பித்தான், ஏன் தன் கணவர் தன்னை தாக்குகிறார் என புரியாது நின்றிருந்தாள்.அப்பொழுது தன் கோடாலியாலேயே மனைவியின் தலையில் அடிக்க இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்து போனாள்.

இவை அனைத்தையும் பார்த்த பார்வதிதேவி, சிவபெருமானிடம்,ஏன் இவ்வாறு ஆனது,உண்மையான அன்பிற்கு கிடைத்த வெகுமதியா இது என கேட்க ?

சிரித்தவாறே....சிவபெருமான்...பிறப்பு, இறப்பு, இன்பம் , துன்பம் என அனைத்தும் அவர்களின் கர்ம பலன்களால் எழுதப்படுபவை.பாண்டியனின் மனைவி, பாண்டியனின் கைகளால் இறக்கவேண்டும் என்பது ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டது.இதை சிவனாலும் மாற்ற முடியாது என்பதே விதி கூறும் உண்மை. 

பாண்டியன்,அவனின் மனைவியை மீட்டெடுக்காமல் இருந்திருந்தால், அவளுக்கான அடையாளம் வேறாக இருந்திருக்கும்.இப்பொழுது நேர் மாறாய் மாறிவிட்டது.

கடந்து சென்ற நிகழ்வுகளை மாற்றவேண்டும் என நினைப்பது, நிகழ்காலத்தை நரகமாக்கிடும்,எதிர்காலத்தை தின்றிடும்.கடந்து செல்வதே புதிய வாழ்விற்கு வித்திடும்.


-ந.மகேந்திரன் 



Post a Comment

0 Comments