காதலில் காத்திருப்பு கொடுமையானது , அதே நேரம் அழகானதும் கூட...
இன்றைய நாளில்,பத்து நிமிடம் தாமதமாக வரும் பேருந்திற்கு காத்திருக்க நேரமில்லாது, அல்ல மனமில்லாது,வழிப்போக்கரிடம் உதவி கேட்டு சென்று விட்டு, மறுநாள் சொந்த வாகனம் வேண்டும் என வீட்டில் சண்டையிடும் தலைமுறைக்கு எங்கு தெரியப்போகிறது காத்திருப்பின் அருமை.
காலையில் எழுந்தது முதல்,பாதி குளியல், முற்றிலும் மறந்த காலை உணவு,தலைக்கு எண்ணெய் வைக்காத காரணத்திற்காக தந்தையிடம் வசப்பேச்சு,உண்ண மறந்ததற்கு தாயிடம் தாலாட்டு என அனைத்தையும் குறையின்றி பெற்றுவிட்டு,அரக்க பறக்க பேருந்து நிறுத்தம் வரக்காரணம் அவள் மட்டுமே.
ஏனென்றல் இன்று தவறவிட்டால், அடுத்த சந்திப்பிற்கு மறுநாள் காலை வரை காத்திருக்க வேண்டும்.
அவள் கடந்து சென்ற பிறகும் கூட,அந்த முப்பது நிமிட பேருந்து நினைவுகள் இன்றுவரை என்னுடன் பயணித்துக்கொண்டே இருக்கிறது.
எளிதாக கிடைத்த எதுவும் நம்மை பெரிதாக ஈர்க்காது,அதுபோல அரிதான விஷயம், கிடைத்திடா விட்டாலும் ஒருபோதும் நம்மை விட்டு நீங்காது.
இன்று வீட்டினுள் அமர்ந்து கொண்டு முன்பதிவு செய்த உணவு,சற்று நேர தாமதத்திற்காக திருப்பி அனுப்பப்படுகிறது. அன்று இட்லி என்ற உணவிற்காக தீபாவளி,பொங்கல் வரை காத்திருந்தோம் என்றால் நகைப்பிற்குரியதே...
காத்திருப்பு கற்று தரும் பாடமே பின்னாளில் அனுபவமாக மாறுகிறது.
சண்டையிட்டு அம்மாவீட்டிற்கு சென்ற மனைவியின் வருகைக்கு காத்திருக்கும் போது தான் கணவன் அறிவான் மனைவியின் அருமை.
திருமணத்திற்கு பேசி முடிவு செய்த பெண்ணை நேரில் காண காரணம் தேடி காத்திருக்கும் தருணம் தான்,உண்மை காதலை உண்டாக்கும்.
தன்னுள் வளரும் சிசுவிற்காக, ஒரு தாயின் பத்துமாத கால காத்திருப்பே, நம்மை காலம் முழுக்க குழந்தையாய் அவள் பாவிக்க காரணம்.
நண்பன் வழக்கமாக வரும் இடத்தில் மணிக்கணக்கில் காத்திருப்பது, அவனுக்கு புரிதலை ஏற்படுத்தும், எனக்கு அவன் எவ்வளவு முக்கியமானவன் என்று.
நினைத்தவுடன் நினைத்த இடத்தில இருந்தே நவீன தொழிநுட்ப உதவியில் பார்த்து பழகும் காதல்,கலப்பின விதைபோல் உடனடி விளைச்சல் தரும் ஆனால் சுவைத்தராது.ஒரு கண் ஜாடைக்கு வாரக்கணக்கில் காத்திருந்த காதல்,நாட்டு மரம்போல் அணைத்து இடத்திலும் அதிக மகசூல் தராவிட்டாலும்,விளைந்த கனியின் சுவை ஆகசிறந்தது,
காத்திருப்பு,எந்த ஒரு சூழலிலும் பொறுமை மற்றும் நிதானத்திற்கு வழிவகுக்கும்.
-ந.மகேந்திரன்

0 Comments