ஜல்லிக்கட்டு போராட்டக்களத்தில் நானும் சுதாகரும்...

 


பெங்களூரில், ஒரு தனியார் நிறுவனத்தில் 2016 முதல் 2018 வரை  நான் வேலைபார்த்தேன்.அங்கு எண்ணற்ற சுவாரஷ்யமான நிகழ்வுகள் நிகழ்ந்தேறியுள்ளன,அவை அனைத்தும் காலத்தால் மறைக்கமுடியாதவை.அவற்றுள் முக்கியமானது நாங்கள் கலந்துகொண்ட ஜல்லிக்கட்டு போராட்டம்.

 எப்பவும் சனிக்கிழமை என்றவுடனே , நாங்கள் அனைவரும் ( உடன் வேலைபார்க்கும் நண்பர்களுடன் ) பொதுவான ஒரு இடத்தில் கூடி ,அலுவலக பணிச்சுமை,நாட்டு நடப்பு,உலக பொருளாதாரம்,அந்நியச்செலாவணி போன்ற பலதரப்பட்ட கருத்துக்களை வட்ட மேசை மாநாடு ஒன்றை நடத்தி விவாதிப்பது வழக்கம்.

வழக்கம் போல் இன்றைய சனிக்கிழமை, மாநாட்டிற்க்கான முன்னேற்பாடுகளை தடபுடலாக ஏற்பாடு செய்தோம். வழக்கத்திற்கு மாறாக இந்த வாரம் மாநாட்டை வேடிக்கை பார்க்கவும் மூவர் வந்திருந்தனர்.

முதல் சுற்று முடியும்வரை சுமூகமாகவே சென்றது மாநாடு.இரண்டாம் சுற்று ஆரம்பிக்கும் போது வந்தது ஒரு தொலைபேசி அழைப்பு, மனிதவள மேம்பாட்டு மேலாளரிடமிருந்து.

பொதுவாகவே உசுப்பேற்றிவிடும் குணம் கொண்ட மேலாளர் ஒரு அற்புதமான வேலையை செய்துவிட்டார்.

எங்கள் நலன் கருதியே இந்த அழைப்பு ,அனைவரின் நிலை குறித்தும் அறிந்த பின்,அழைப்பை துண்டிக்கும் முன் கூறினார் ஒரு வார்த்தை " அங்க தமிழ்நாட்ல ஜல்லிக்கட்டுக்காக ஊரே போராடிட்டு இருக்கு நீங்க என்னடானா இங்க சும்மா உக்காந்து பேசிட்டு இருக்கீங்க. " இது போதுமல்லவா மூன்று மற்றும் நான்காம் சுற்றுக்களை முடித்துவைக்க.

கார சாரா விவாதம் தொடங்கியது,அனைவர் கண்களிலும் தமிழுணர்வு பொங்கியது.உடனடியாக ஒரு முடிவு எடுக்கப்பட்டது. நாமும் அந்த போராட்டத்தில் கலந்துகொள்ளவேண்டும் என ஒரு மனதாக முடிவுசெய்யப்பட்டது.இதில் ஆச்சர்யப்படவேண்டிய விஷயம் வேடிக்கை பார்க்க வந்தவர்களும் உடன் வர ஒப்புதல் அளித்தது..

அனைவரும் அங்கிருந்து அப்படியே அருகில் இருந்த இரயில் நிலையத்திற்கு விரைந்தோம்.அடுத்து வரும் இரயிலிற்கான பயணசீட்டை பெற்றுக்கொண்டு,காத்திருந்தோம். யாரிடமும் மாற்று துணியோ , பணமோ,கைபேசியில் பேட்டரி அளவு என  எதுவும் கிடையாது. ஒருவரிடம் மட்டுமே பணம் இருந்தது.அவரே அப்போதைக்கு நிர்வாக தலைவர்.பணம் தீரும்வரை அவருடைய முடிவுகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 

மற்றவர்களோ எதைப்பற்றியும் யோசிக்காது,வந்த ரயிலில் வடக்கு நண்பர்களுடன் நின்றபடியே உறங்கியும் உறங்காது,சென்னையை நோக்கி பயணப்பட்டோம்.

நள்ளிரவு புறப்பட்ட இரயில் அதிகாலையில் வந்தடைந்தது சென்னை மத்திய இரயில் நிலையத்துக்கு. இதுவரை சினிமாவில் கண்டதை முதல்முறை நேரில் பார்த்தேன். மிகவும் பிரமாண்டமாகவே இருந்தது .

பின் அங்கிருந்து எதிரில் உள்ள உள்ளூர் ரயில் நிலையத்திற்கு வந்து மெரினா கடற்கரை நோக்கி பயணப்பட்டோம்.எங்களுடன் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களும் இருந்தனர், ஆனால் யாரும் பயணசீட்டு வாங்கியதற்கான அறிகுறியே இல்லை.

ஒருவழியாக வந்தடைந்தோம் மெரினா கடற்கரைக்கு. காணும் இடமெல்லாம் மக்கள்கூட்டம் , தனி தனி குழுக்களாக தங்களுடைய பாணியில் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.இதுவரை நான்கண்ட போராட்டங்கள் வழியும் வேதனையும் நிறைந்த ஒன்றாக இருக்கும், மாறாக இது இளைஞர்கள் நடத்தும் போராட்டம் என்பதாலோ என்னவோ,ஆட்டம் பாட்டு ,உற்சாக பேச்சு,என திருவிழா போல் காட்சியளித்தது.

காணாததை கண்டவன் கண் அலைமோதுவதை போல , மெரீனாவின் பரப்பளவு தெரியாது ஆளுக்கு ஒருபுறம் செல்ல நேர்ந்தது.காலை என்பதால் கூட்டமும் குறைவாகவே இருந்தது.

அதில் நானும் என் நண்பன் சுதாகரும் தனியாக பிரிந்துவிட்டோம்.எங்களுக்கு இதுவே முதல்முறை என்பதால் சுற்றிப்பாக்க முடிவு செய்து,எங்கள் குழு தலைவரிடம் தெரிவித்து விட்டு கடலில் கால்நனைக்க சென்றோம்.

அவனிடம் ஒரு ரூபாய் கூட இல்லை , என்னிடம் இருப்பது ரூபா இருந்தது,பத்து ரூபாக்கு ஒரு அவிச்ச கடலை , பத்துரூபாக்கு மாங்கா கீத்து,என ஆளுக்கு ஒன்றை வாங்கி கொண்டு அங்கேயே அமர்ந்துவிட்டோம்.

கூட்டை இழந்த வண்டு , கூடு இருந்த இடத்தையே ரீங்காரமிட்டு சுற்றி வருவது போல, கடலலை எங்கள் பாதங்களை சுற்றியே வந்தது, அனைவரும் கடற்கரையில் இருந்ததாலோ,காலை நேரம் என்பதாலோ கடலருகில் கூட்டம் குறைவாகவே இருந்தது. அந்த அனுபவம் மிகவும் ரம்மியமாக இருந்தது இருவருக்கும்.

கடலை காலியானது, கால்களும் போதுமானளவு நனைந்துவிட்டது.சரி போதும் என நினைத்து கரைக்கு திரும்பிய எங்களுக்கு காத்திருந்தது பேரதிர்ச்சி.

எங்களது குழுவை நாங்கள் தொலைத்துவிட்டோம். யாரையும் காணவில்லை.ஆனாலும் அப்பொழுது எங்களுக்கு பெரிதாக எந்த பயமும் இல்லை இங்குதான் எங்காது இருப்பார்கள் என தேட ஆரம்பித்தோம்.

காலை பத்து மணிக்கு தேட அரம்பித்த எங்களால மதியம் ஒரு மணி ஆகியும் யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை.நேரம் ஆக ஆக கடற்கரையில் மக்கள் கூட்டம் கூடிக்கொண்டே போனது.

பலமுறை சுற்றிவந்ததில் இருவரின் கால்களும் தளர்த்துவிட்டன,பசியில் வயிற்றுக்குள் பலவித கூச்சல்கள் வேறு,கையில் ஒரு ரூபா கூட இல்லை,தொடர்புகொள்ள அவனது கைபேசி செயலில் இல்லை,என்னிடம் கைபேசியை இல்லை.

நேரம் செல்ல செல்ல தன்னை அறியாது அச்சம் மிகுந்தது, முதலில் பசிக்கு தீர்வுகாண முடிவுசெய்து,முயற்சியை தொடங்கினோம்.ஆங்காங்கே போராட்டக்காரர்களுக்காக சில தன் ஆர்வலர்கள் உணவு பொட்டலங்களை வழங்கினர்.அதை வாங்க அலைமோதும் மக்கள் கூட்டம். என்னால் அக்கூட்டத்தினுள் நுழையவே முடியவில்லை. சரி இது ஆகாது, அருகில் குடிநீர் வழங்கிக்கொண்டிருந்தனர், அங்கு கூட்டம் குறைவாகவே இருந்தது.அதனால் எளிமையாக தண்ணீரை வாங்கிவிட்டேன்.

கூட்டத்தினுள் நுழைந்து தண்ணீர் வாங்கிவிட்ட கர்வத்தில் நான் திரும்ப,என் பின்னே ஒரு கையில் தாலிச்ச தயிர்சாதம் , மறுகையில் முருங்கைக்காய் சாம்பார் சாதம் என இரண்டுபொட்டலங்களை லாவகமாக வாங்கிவந்துவிட்டான்.

இரண்டும்  அவ்வளவு அருமையாக இருந்தது.ஒருவழியாக மதிய உணவை முடித்துவிட்டு,அடுத்த கட்ட நடவடிக்கையை பற்றி யோசித்தோம்.எப்படியாது இன்று இரவு பெங்களூரு செல்லவேண்டும். இருவரிடமும் காசு இல்லை,சரி யாரது ஒருவரிடம் கைபேசி வாங்கி தொடர்புகொள்ளலாம் என்றால் எனக்கு என் அப்பா , அவனுக்கு அவன் அப்பா , எண்ணை தவிர மற்றவர்கள் கைபேசி எண் மனப்பாடமாக தெரியாது.

எங்களது வீட்டாருக்கு நாங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் யாரையும் தெரியாது.இருந்தது ஒரே வழி,எங்களது கைபேசியில் உள்ள சிம் அட்டையை வேறு கைபேசியில் மாற்றினால் மட்டுமே அதில் பதிவாகியுள்ள எண்களுக்கு அழைக்க முடியும். 

நாங்கள் இருவரும்,அனைவரிடமும் கைபேசியை கேக்க.எல்லாரும் ஒருவித ஏளனமாய் பார்த்தனர்.இதுவரை என்னிடம் யாரது வழிப்போக்கர் வந்து , கைபேசியை கேட்டால், எங்கு திருடி சென்றுடுவார்களோ என்ற அச்சத்திலே கடந்து சென்றிருப்பேன்.அது அவர்களை எந்தளவு காயப்படுத்தியிருக்கும் என்பதை இப்பொது உணர்கிறேன்.

ஒருவழியாக நல்லுள்ளம் படைத்த ஒருவர் எங்களுக்கு கைபேசியை தர முன்வந்தார், உடனே அதில் சிம் அட்டையை மாற்றி , அழைத்து பார்த்தாள் ,எங்கள் குழுவில் உள்ள அனைவரின் கைபேசியின் பேட்டரியும் முடிந்துவிட்டது.சரி வேறு வலி இல்லை என்று ,அன்று எங்களோடு வராமல் பெங்களூருவிலேயே இருந்த தினேஷுக்கு(எங்களது சீனியர் அதிகாரி) அழைத்து எங்களது வங்கிக்கணக்கிற்கு ஐந்நூறு ரூபாயை அனுப்ப சொன்னோம்.ஏற்கனவே என் வங்கி கணக்கில் முன்னூறுஉள்ளது ,அவர் ஐந்நூறு அனுப்பினால் மொத்தம் எண்ணூறு.எளிதாக ஊர் திரும்பிடலாம் என்பது எங்கள் கணக்கு. .

அவரும் எங்களது நிலை அறிந்து உடனே அனுப்பிவைத்தார். இனி இங்கு காத்திருத்தல் வீண்,ஏனென்றால் ஏற்கனவே நேரம் மாலை ஆறு ஆகிவிட்டது. இனியும் தாமதமானால் விடிவதற்குள் பெங்களூரு போகமுடியாது.ஆகையால் அருகில் உள்ள தன்னியக்க வங்கி இயந்திரத்தில் பணத்தினை எடுத்துக்கொண்டு திரும்பி சென்றுவிடலாம் என நாங்கள் ஒரு முடிவு செய்தால்,அன்று மெரீனா கடற்கரையை சுற்றியுள்ள எந்த இயந்திரத்திலும் பணம் வரவில்லை,அனைத்தும் காலிசெய்யப்பட்டுவிட்டது.

இதற்க்கு மேல் பொறுமை இழந்த இருவரும்,மெரீனாவில் இருந்து பயணசீட்டு இன்றி மத்திய ரயில் நிலையத்திற்கு சென்றிடுவோம்,அங்கும் பணம் எடுக்க முடியவில்லை என்றால்,பெங்களூருவிக்கும் பயணசீட்டு இன்றியே பயணத்தை தொடர்ந்திடுவோம்.வழியில் மாட்டிக்கொண்டால் ஆனதை பார்த்துக்கொள்ளலாம் என்ற தைரியத்தில் கிளம்பினோம்.கட்டுக்கடங்காத கூட்டம் என்பதால் எளிதாக பயணசீட்டு இன்றி மத்திய ரயில்நிலையத்திற்கு வந்தடைந்தோம்.அங்கு அருகில் எதாவது தன்னியக்க வங்கி இயந்திரம் உள்ளதா என பார்த்தோம், அங்கும் பணம் கிடைக்கவில்லை.

இனியும் நேரமில்லை ஏற்கனவே ஏழரை ஆகிவிட்டது.ஆவதை பார்த்துக்கொள்ளலாம் வாடா என இருவரும் வீர நடையிட்டு வரும் வேளையில்,தொலைந்து போன அனைவரும் மத்திய ரயில்நிலைய வாசலில் நின்றிருந்தனர்.அப்போது வந்தது பார் ஒரு பயம் , எங்கு நம்மை திட்டி தீர்த்திடுவாரோ என்று. அவர்களுக்கு முன் நாங்கள் முந்திக்கொண்டோம்,

"எங்களை பத்திரமாக பாத்துக்க தெரியாதா?, அப்பறம் எதுக்கு கூட்டிட்டு வந்திங்க,எத்தனை நாள் சதித்திட்டம் இது ,எங்களை இங்கு வந்து தொலைப்பது என்று.அலுவலகத்தில் சில நேரங்களில் உங்கள் மீதுள்ள உரிமையில் எங்களையறியாது சிறு சிறு அவமதிப்புகள் செய்தது உண்மையே அதற்காக இப்படியா "

என இடைவிடாது கேள்விகளை கேக்க, சரி விடுங்கடா , சாப்பிட்டீங்களா என்று அவர்கள் கேக்க, உடனே ஆளுக்கு ரெண்டு புரோட்டா ஒரு முட்டை கலக்கி என இரவு வேலை உணவை முடித்துவிட்டு,பெங்களூரு நோக்கி பயணப்பட்டோம்.

காலையில் அலுவலகத்திற்கு சென்றால் நாங்கள் இருவர் தான் கதா நாயகர்கள் ,இன்று நாங்கள் செய்த சம்பவம் அந்தமாறி.

இன்றைய நாளில் நாங்கள் புரிந்துகொண்டது,எவ்வளவோ முயற்சி செய்தும் அனைத்துமே தோல்வியிலேயே முடிந்தது.இருப்பினும் முயற்சியை கைவிடவில்லை.தொடர் முயற்சி நிச்சயம் இலக்கினை அடைந்திடும் என்ற கூற்று சரியே.....


-ந.மகேந்திரன் 

Post a Comment

0 Comments