மரகத மலையடிவாரத்தில்,சஞ்சீவி நதி சூழ, நடுப்புறம் அமைந்துள்ளது சிறுகளஞ்சி மலைக்கிராமம்.
இயற்க்கை எழில் நிறைந்த,முப்புரம் நீர்,ஒரு புறம் நிலம்(மலைப்பகுதி) என தனி தீபகற்பமாக திகழ்கிறது.இதனாலேயே வெளி ஊர்களுடம் எந்தவித தொடர்பும் இன்றி தனித்து விளங்குகிறது.
அதிவேக நவீனமயமாகும் ஊர்களுக்கு மத்தியில், போதிய மின்சார வசதி இல்லாது,தகவல் தொடர்பு வசதி இல்லாது,உணவு உடை இருப்பிடம் போன்ற அத்தியாவசியம் தவிர்த்து,எந்தவொரு ஆடம்பர வசதிகளும் இல்லாத ஊரு.இவ்வூரில் பட்டப்படிப்பு முடித்து, பட்டணத்தில் வேலைக்கு வந்த முதல் ஆள் நான்.
ஒரு தனியார் நிறுவனத்தில் கடைநிலை ஊழியராக பணிபுரிகிறேன்,மாத வருமானம் ஒன்பதாயிரம்.
எங்க ஊரில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் கிடையாது, அவசர காலங்களில் மருத்துவமனைக்கு செல்லவேண்டும் என்றால் கூட நீண்ட நேர நீர்வழி யாத்திரைக்கு பிறகே தரைப்பகுதிக்கு வரமுடியும்.எங்கள் ஊரு மக்களின் எண்ணிக்கை குறைவு என்பதால் அரசாங்கமும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.மண்ணுக்கடியில் கனிமவளங்களும் இல்லாததால்,தனியார் முதலாளிகளும் கண்டுகொள்ளவில்லை.கேப்பாரற்று காட்டினுள் மாட்டிய மனிதனை , அந்த காடே வளர்த்தால் எப்படி இருக்குமோ, அதுபோலவே எங்களது வாழ்வியல் இருந்தது.
எம் மக்களின் அவதி கண்டு இவ்வூரின் மீது வெறுப்பும்,கோபமும் கொண்டேன்.இதனாலேயே பலரின் எதிர்ப்பை மீறி, என் வீட்டாருக்கு விருப்பமில்லாத போதும் படித்து முடித்து பட்டணத்திற்கு வேலைக்கு வந்தேன்.நான் பணிக்கு வந்து மூன்று மாத காலம் முடிந்து,முதல் முறையாக விடுப்பு எடுத்து வீடு நோக்கி சென்றுகொண்டிருக்கிறேன்.இந்த மூன்றுமாத காலம் தந்த அனுபவம்,எந்தன் ஊர் மீது நான்கொண்டிருந்த எண்ணத்தை மாற்றியது.
இயந்திரமயமான ஊர்களுக்கு மத்தியில் இப்படியும் ஓர் ஊர் உள்ளது.
எங்க ஊர்ல,நான் செஞ்ச வேலைக்கான கூலிய வேற ஒருத்தருக்கு குடுக்கமாட்டாங்க...
எங்க ஊரு காரங்க போட்டி போட்டு வேலை செய்வாங்க,போட்டுகுடுத்து வேலை செய்யமாட்டாங்க....
இக்கட்டான நேரத்துல கேக்காமலே உதவி பண்ணுவாங்க, கேட்ட பிறகும் கூட உதாசினப்படுத்தமாட்டாங்க....
அக்கம் பக்கத்தினர் குடும்பத்திலும் ஒரு அங்கமாக இருப்பாங்க....
எங்க ஊரு கால்நடைகள் கூட நன்றிமறவாது......
எங்க ஊரு மக்களின் எண்ணிக்கை குறைவானாலும் ஒரே கூட்டமாக இருந்தார்கள்,இங்கு எண்ணிக்கை கூடினாலும் தனியாகவே இருக்கிறார்கள்...
இந்த ஊர்ல ஆடம்பர வசதிகள் ஆயிரம் இருந்தாலும்,அனைவர் மனமும் ஒருவித நெருக்கடியிலே கிடந்தது...
எங்க ஊர்ல அத்யாவசிய வசதிகள் இல்லாத போதும் மனநிறைவிற்கு குறையேதுமில்ல....
குறிப்பாக பிறர் துயரில் இங்கு யாரும் இன்பம் கொள்வதில்லை....
இயந்திர இரைச்சல், வாகன புகை தாண்டி ,என் ஊருக்கு வந்துகொண்டிருக்கிறேன்....
பல்லாயிரம் காரணம் சொல்லி இரண்டு நாள் விடுப்பில், என் ஊருக்கு வரும் நான் திரும்ப போகவேண்டுமா? என்ற கேள்வியுடனே பயணத்தை தொடங்கியுள்ளேன்.
இந்த ஊர்ல உண்மையானவங்களும் இருக்காங்க, ஆனா யாரு உண்மையானவங்கனு கண்டறிதலுக்கே, தனி திறன் வேண்டும்.போலியான சிரிப்பு,போலியான கோவம்,போலியான பாராட்டு,போலியான உறவுகள் என இவைகளுக்கு மத்தியில் மாட்டிக்கொண்டு என் வாழ்க்கையும் போலியாகிவிடுமோ என்ற அச்சமே....தவிர வேறு எந்த வெறுப்புமில்லை.
-ந.மகேந்திரன்

0 Comments