இரவு ஒன்பது மணி...மிகுந்த பதட்டத்துடன் ஒரு பெரியவர் காவல்நிலையதிற்க்குள் நுழைந்தார்,
பதட்டத்திற்கான காரணம், வழக்கமாக சிறப்பு வகுப்புக்கள் எல்லாம் முடித்துவிட்டு 6 மணிக்கு வீடு வரவேண்டிய மகள் , 9 மணி ஆகியும் வரவில்லை என்பதே.
உள்ளே வந்த பெரியவரை பார்த்த காவலர் ஒருவர்,என்னய்யா ஆச்சு,என்ன பிரச்சனை என கேட்க,
தளர்ந்த குரலில் , என் மகளை காணல அய்யா , எப்படியாது கண்டுபுடிச்சு குடுங்க என கதறி அழுதார்.
அதை கண்டு மனம் கலங்கிய காவலர் , இங்க உக்காருங்க இன்னும் கொஞ்ச நேரத்துல ஏட்டையாவும்,இன்ஸ்பெக்ட்டர் அய்யாவும் வந்துருவாங்க, அவுங்க கிட்ட சொல்லுங்க,என சமாதானப்படுத்தி அமரவைத்தார்.
சற்று நேரம் கழித்து ஏட்டையா வந்தார். அவர் முதியவரின்,
தோற்றம் கண்டு ( பாடுபட்டு இழைத்த உடல்,கசங்கிய அழுக்கு உடை,ரேகை தேய்ந்த கரங்கள்) மிகவும் ஏளனமாக,
ஏட்டைய்யா : என்ன பெருசு, என்ன பிரச்னை?
முதியவர்: அய்யா 6 மணிக்கு வரவேண்டிய என் புள்ளை இன்னும் வீட்டுக்கு வரல, பள்ளிக்கூடத்துல கேட்டா ,உங்க பொண்ணு இங்க இல்லைனு சொல்றங்க,கூட படிக்கற புள்ளைங்களுக்கும் எந்த வெவரமும் தெரியல ,ஏதாது பண்ணி என் புள்ளைய கண்டுபுடிச்சு குடுங்கய்யா.... என கதறி அழுதார்.
ஏட்டைய்யா : சரி சரி,அழமா உங்க பொண்ண பத்தின விவரத்தை குடுங்க,
என வேண்டா வெறுப்பாக அடிப்படை விவரங்களை வெள்ளைத்தாளில் விவரமாக எழுதிக்கொண்டார்.
தேவையான விவரங்களை பெற்ற ஏட்டைய்யா,முதியவரை ஒரு ஓரமாக நிற்க சொல்லிவிட்டு,இன்ஸ்பெக்டர் அய்யாவின் அறையினுள் சென்றார்.
காவல்நிலையத்திற்கு புகார் அளிக்க வந்த பெண்ணிற்கு, தொலைபேசி வாயிலாக தன் அந்தரங்க ஆசைகளுக்கு இணங்க அச்சுறுத்திக்கொண்டிருந்தார் இன்ஸ்பெக்ட்டர். அச்சமயத்தில் ஏட்டைய்யாவின் வரவு தொலைபேசி அழைப்பை துண்டிக்க வைத்தது.
இன்ஸ்பெக்டர் : யோ.. உள்ள வரதுக்கு முன்னாடி சொல்லிட்டு வரமாட்டியா... என மிரட்டும் தோணியில் பேச.
ஏட்டைய்யா: யாரு நம்ம ராணி நகர் வனஜா தான...
இன்ஸ்பெக்டர் : அதுக்குள்ள எப்டியா மோப்பம்புடிச்ச,வெளிய நின்னு ஒட்டுகேக்கரயா ...
ஏட்டைய்யா: நீங்க பேசறது தா வாச வரைக்கும் கேக்குதே, இத தனியா வேற ஒட்டுகேக்கணுமா...என ஏட்டைய்யா கோவித்துக்கொள்ள,
இன்ஸ்பெக்டர் : சரி சரி விடுயா என சிரித்து மழுப்பிய படி, அந்த பெருசுக்கு என்ன பிரச்னை,பசங்க வீட்டைவிட்டு வெளிய அனுப்பிட்டாங்களா ? இல்லை சொந்த பூரா ஏமாத்தி புடுங்கிட்டாங்களா?பிரச்னையை செட்டில்மென்ட் பண்ணா நமக்கு ஏதாது தேறுமா? போன்ற கேள்விகளை அடுக்க.
ஏட்டைய்யா:அதுலா இல்ல, இது பொண்ணு மிஸ்ஸிங் கேசு....
இன்ஸ்பெக்டர் : பொண்ணு கேசா....?
ஏட்டைய்யா: ஆமா..,ஸ்கூல் போன பொண்ணு இன்னும் வீட்டுக்கு வரல....
இன்ஸ்பெக்டர் : என்னயா சொல்ற ஆல பாத்தா,தாத்தா மாறி இருக்கா,இந்தாளுக்கு ஸ்கூல் போற பொண்ண,இதுவே சந்தேகமா இருக்கே,அப்ப.....என தன் வக்கிர எண்ணத்தை வெளிப்படுத்த,
ஏட்டைய்யா: அவரு பொண்டாட்டி இப்ப உயிரோட இல்ல, இவரும், இவரு பொண்ணு மட்டும் தான் பக்கத்து தெருல இருகாங்க,சொந்த பந்தம்னு யாரும் கெடயாது,இவரு ரோட்டோர உணவுக்கடை வச்சிருக்காரு,நமக்கு மாமூல் கூட கரெக்டா குடுக்கறாரு.
இன்ஸ்பெக்டர் : ஓ..அப்ப அந்த பெருசு பணத்துலதா நா சோறு திங்கற, ஒடனே போயி கண்டுபுடினு சொல்றயா ? என கோபமுற்றார்.
ஏட்டைய்யா: அதற்க்கு சற்று பயம்கலந்த நக்கலுடன்,நா அப்டி சொல்லலைங்கய்யா..
இன்ஸ்பெக்டர் : பின்ன வேற எப்படி? அந்தாளு பொண்ணு எவன்கூடயாது ஓடி போயிருப்ப,நாலு நாள்ல மாலையும் கழுத்துமா வந்து நிப்பா,இல்லனா நாலுமாசம் கழிச்சு வயித்த ரொப்பிட்டு வந்து நிப்பா,இத நாம தனிப்படை அமைச்சு தேடணுமா?
போயா,கம்பளைண்ட் வாங்கிட்ட ல,எதாவது சொல்லி அனுப்பு,இத அப்பறம் பாக்கலாம்...
என இருவருக்கும் இடையேயான உரையாடலை வெளியிருந்து கேட்டுக்கொண்டிருந்த முதியவருக்கு,என்ன செய்வதென்றே அறியவில்லை.மனதளவில் மிகுந்த கோபமும் வலியும் நிறைந்திருந்த போதிலும்,அதனை வெளிக்காட்டும் உரிமையும் சுதந்திரமும் அவருக்கு வழங்கப்படவில்லை,இங்கு பொருளாதாரமும் செல்வாக்கும் நிறைந்தவனுக்கே அனைத்தும்.
மணி 10 ஆயிற்று,முதியவரின் அச்சமும் அதிகரிக்க தொடங்கியது. அப்பொழுது காவல்நிலைய வாசலில் வேகமாக ஒரு உயர் ரக வாகனமொன்று வந்து நின்றது.அதில் இருந்து நாலுபேரு காவல்நிலைத்தினுள் நுழைந்தனர். அவர்கள் பார்ப்பதற்கு கண்கூசும் வெண்ணிற உடையில்,தங்க அணிகலன்களால் அலங்கரிக்கப்பட்டு,உடல் பருமன் மிகுந்து இருந்தனர்.
அவர்கள் ஏற்கனவே வி.ஐ.பி தரிசன சீட்டு வாங்கியுள்ளனர் போல, நேரடியாக கருவறையினுள் நுழைவது போல் எவ்வித தடுப்பும், காத்திருப்புமின்றி இன்ஸ்பெக்ட்டர் அறையினுள் நுழைந்தனர்.
அதுவரை பலவித இரைச்சல் நிறைந்திருந்த காவல்நிலையம்,இப்பொழுது எவ்வித சத்தமுமின்றி அமைதியானது,வெளியில் இருந்த காவலர் வேக வேகமாக, தேநீருடன்,சிறுதீனி பையையும் கொண்டு சென்றார்.அவர்களுக்கு இடையேயான உரையாடல் நீண்டது, அவ்வப்போது கேட்ட அதீத நகைப்பின் சப்தம் முதியவரின் பொறுமையை கரைத்துக்கொண்டிருந்தது.
சிறிது நேரம் கழித்து அறையின் கதவு திறக்கப்பட்டது.தரிசம் முடித்த நால்வரும் விடைபெற்றனர்,இன்ஸ்பெக்ட்டர் 500ரூபா நோட்டு கட்டை எண்ணிக்கொண்டிருந்தார்,ஏட்டைய்யா வாசல்வரை வந்து வழியனுப்பிவைத்தார்.
அவர்கள் சென்ற பின்...
இது வெறும் முன்பணம் மட்டுமே,வேல முடுஞ்சா பெருசா கிடைக்கும் என ஏட்டைய்யாவும்,இன்ஸ்பெக்ட்டரும் பேசிக்கொண்டனர்.இவையனைத்தையும் முதியவர் பார்த்தும் பார்க்காதது போலும் அங்கு ஒரு மூலையில் நின்றிருந்தார்.
தங்களுக்கான பங்கு பிரிப்பிற்கு பிறகு.....
இன்ஸ்பெக்ட்டர்: அந்த பெருச, ஏதாது சொல்லி அனுப்பு,அந்தாளு குடுத்த கேச,நீபாட்டுக்கு சிஸ்டம்ல ஏத்திறாத,மைனர் பொண்ணு வேற ஒடனே ஏன் ஆக்சன் எடுக்கலைனு ஏன் தலையை தின்னுருவனுங்க...அந்த பொண்ணு போட்டோவை வாங்கி ஸ்டேஷன் நோட்டீஸ் போர்டு ல போற்றுரு,அப்பரம் நம்ம பட்ரோல்க்கு அனுப்பிரு,ரெண்டு நாள் போகட்டும்,அதுக்குள்ள எந்த தகவலும் கிடைக்காமலா போயிரும்.
சீக்கரம் அந்த பெருச அனுப்பிட்டு வாய,காசு வேற வாங்கிட்டோம்,வேலைய முடிக்கணும், என்று கூறியவாறே வெளியில் நின்ற காவல்நிலைய வாகனத்தில் ஏறினார்.
ஏட்டைய்யாவும், முதியவரிடம், நீ ஒன்னும் பயப்படாத,இப்ப உன் பொண்ணு பத்தி விசாரிக்கத்தான் போறோம்.நீ இப்ப தைரியமா வீட்டுக்கு போ, காலைல வா,அதுக்குள்ள எதாவது தகவல் கெடச்சா சொல்ட்ரோம்,
என்று பற்பல கதைகளை கூறி அனுப்பிவைத்தார்.பல ஆண்டுகால F .I . R ( முதல் தகவல் அறிக்கை )எழுதியுள்ள அனுபவமல்லவா,அவரிடம் கதைகளுக்கா பஞ்சாமிருக்க போகிறது.
சிறந்த கதை, திரைக்கதைக்கான விருது போட்டிகளுக்கு காவல்நிலைய முதல் தகவல் அறிக்கையை அனுப்பிவைத்தால், எந்த கதாசிரியருக்கும் விருத்திகிடைக்க வாய்ப்பில்லை.
என்று பொருளாதார அடிப்படையில் மனிதனை மதிப்பிட ஆரம்பித்தோமோ அன்றே மனிதம் மரணிக்க தொடங்கிவிட்டது.
ந.மகேந்திரன்

0 Comments