காகிதம் தேடி...


பணம்  என்னும் காகிதம் தேடி ஓடும் மாந்தர்களில் நானும் ஒருவனே...

அன்றோ அரை அணாவுக்கு விற்ற தின்பண்டம் இன்று அஞ்சு ரூபா....

நாளுக்கு நாள் மதிப்பிழக்கும் பணத்திற்க்காக,விலைமதிப்பில்லா நேரத்தை நாம் விரயமாக்குகிறோம்.

காசு வாழ்வியலை இயக்க தேவையான ஒரு கருவி மட்டுமே, காசு மட்டுமே வாழ்வியலை முற்றிலுமாக இயக்கி விடாது.

பகல் முழுதும் மேய்ச்சலுக்கு சென்ற மாடு கூட,இரவு நேரத்தில் அசை போடா சிறு உணவை வாயிலேயே வைத்திருக்கும்.அதுபோலயாவது நாமும்,இளமை முழுதும் பணத்திற்க்கான பந்தயத்தில் குதிரைபோல் ஓடினாலும், முதுமையில் அசை போடா சிறிது அழகிய தருணங்களையாது,நினைவுகளாக வைத்திருக்க வேண்டும்.

ஆடம்பரமான வீடு,பகட்டான வாகனம்,என பார்த்து பார்த்து உணர்வில்லா சொத்துக்களை சேர்க்கும் நாம்,நம் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் உறவுகளை சேர்க்க தவறிவிடுகிறோம்.முதுமையில் வறுமையை காட்டிலும் கொடிது தனிமையே.

இன்றைய நாளில் நமக்கான வாழ்வியலை நாமே தீர்மானிப்பதில்லை,அக்கம் பக்கத்தினரை பார்த்து தீர்மானிக்கும் கெட்ட பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளோம்.

ஆனந்தமான வாழ்வு என்பது,விரைய செலவு செய்வதில் இல்லை.வீண் செலவுகளை தவிர்த்தும் வாழ்ந்திட முடியும்.

மூவர் மட்டுமே உள்ள குடும்பத்திற்கு இரண்டு மாடி வீடு எதற்கு? அதுவும் கடனில்...பெரிய வீடு வைத்திருத்தல் சமூகத்தில் மதிப்பளிக்கும் என்பது போலி பிம்பமே,பின்நாளில் அக்கடனிற்கான ஓட்டம் மொத்த குடும்பத்தின் நிம்மதியை அழித்திடும்.வருமானத்திற்க்கான வாழ்வியல் மட்டுமே மனநிறைவு தரும்,வருமானத்தை மிஞ்சிய வாழ்வு மனவுளைச்சலையே உண்டாக்கும்.

நம்பும் படியான உறவுகள் இன்று இல்லை,எல்லாரும் பணத்திற்க்கே முக்கியத்துவம்  தருகின்றனர்,என குறை கூறும் முன் நாம் எப்பேர்ப்பட்ட உறவாக பிறருக்கு இருக்கிறோம் என்பதை புரிந்திடல் வேண்டும்.மாற்றத்திற்க்கான விதை முதலில் நம்முள் முளைத்திட வேண்டும்,நம்முடைய மாற்றம் நிச்சயம் விளைவுகளை ஏற்படுத்தும்.

எல்லா உயிர்களுக்கும் உணர்வுகள் உண்டு.அதை மதித்திடல் மாபெரும் நற்குணம்.பிறர் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் யாரும் வீழ்ந்திடப்போவதில்லை.

எப்பொழுதும், எல்லா இடத்திலும், தான் மட்டுமே புத்திசாலி என கருதி செயல்படுதல் முட்டாள்தனமே.

பணத்திற்கான தேடலின் கொடூரம்,இன்று அனைத்தும் வியாபார மயமே,தன் உற்றார் உறவினருக்கு செய்திடும் உதவியில் கூட ஆதாயம் எதிர்பார்க்கும் சூழல்.பின்னாளில் தாய்ப்பாலிற்கு விலை வைத்தால் கூட ஆச்சர்யமில்லை.

இவை அனைத்தும் அழிவிற்கான ஆரம்பமே....

பணமென்னும் காகித குப்பை தவிர்த்து,சுத்தமான சுற்றுப்புறத்தை அமைத்திடுவோம்.


Post a Comment

0 Comments