ஹைக்கூ பகுதி - 3
💗.சில நிமிட பயணத்திற்க்காக,பல மணிநேரம் காத்திருக்கிறான்,மடையன் என ஏசும் அனைவருக்கும், இப்பயணத்தின் முக்கியத்துவத்தை நாம் எடுத்துரைக்கவேண்டிய அவசியம் இல்லை.
💗.என்னால் எழுதப்பட்டவை அனைத்தும் என் வாழ்வினில் நிகழ்ந்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை.நான் விரும்பிய நிகழ்வுகளாகவும் இருக்கலாம்.
💗.நிகழ்ந்தேறிய நிகழ்வுகள் அனைத்தும் நிழலாய் மறைந்திட, நடப்பவை எல்லாம் நன்மைக்கே, என என்னை நானே ஏமாற்றிட, எதை நோக்கிய நகர்வு இது, என காலம்தான் குழம்பிட, தேங்கிய நீர் தனில் வீழ்ந்த இலை போல் ஆடாது,அசையாது,கிடக்கும் என் அருமை வாழ்க்கையே.
💗.ஆக்ரோஷ வேட்டை குணம் கொண்ட பருந்துகளுக்கு மத்தியில்,பழம் திண்ணும் பறவைகளுமுண்டு, குருதி புசிக்கும் மிருகங்களுக்கு மத்தியில் குழந்தை குணம் கொண்ட மிருகங்களுமுண்டு, நம் சுற்றுப்புறம் எவற்றால் நிரம்பியிருக்க வேண்டுமென்பது,நாம் எவ்வாறு இருக்கிறோம் என்பதை பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது.விஷப்பாம்பின் நண்பனோ,உறவினரோ,யாராயினும் மற்றொரு விஷப்பாம்பாகத்தான் இருந்திட முடியும் என்பது இயற்க்கை.
💗."நாற்பது ரூபாய் ரொம்ப அதிகம் ,முற்பது ரூபா தா தருவேன்,காசு மட்டும் முக்கியம் இல்ல,வாடிக்கையாளரின் மனநிறைவும் முக்கியம்" என ,உயர் ரக நான்கு சக்கர வாகனத்தில் வந்தவர் வாதாடுவதை கேட்டு,வறுமை கோடுகளால் நிறைந்த முகத்தினில் புன்னகை தழும்ப, ஏதும் மறுக்காமல் மீதி சில்லறையை கொடுத்து சென்றாள் சுண்டல்காரி.
💗.தன் காதலி,தன்னிடம் அகப்பட்டு கொண்ட போதிலும்,அவளது அனுமதி வேண்டி தள்ளி நின்ற இராவணனே,ஆகச்சிறந்த ஒருதலை காதலன்.
💗.பொறுப்பெனும் சுமை கூட கூட ,தனக்கென வாழ மறந்து,அனைத்திலும் ஈடுபாடு குறைந்து,கவனம் முழுதும் தலைமீதுள்ள பொறுப்பெனும் பாரத்தில் இருப்பதாலோ என்னவோ,சுற்றுப்புறத்திலிருந்து விலகி தனிமை சிறையினில் அகப்பட்டுக்கொள்கிறோம்.
💗.திரள் முழுதும் மக்கள் நிரம்பியிருந்த பொழுதிலும்,நிகழ்ச்சி ஏற்பாட்டாளரின் மனம் , விற்காது மீந்து போன நாலு,ஐந்து சீட்டுகளை குறித்தே இருக்கும். மனித மனம் விந்தையானது,இருப்பதை விட இழந்ததை நினைத்தே அதிகம் வேதனை கொள்ளும்.
💗.பேருந்தில் ஏறியவுடன் ஜன்னல் ஒர இருக்கையை என்னிடமிருந்து பறித்துவிடுவாள் அவள்.அதில் என்ன ஆனந்தமோ அவளுக்கு,ஒன்றாக இருவரும் பயணித்தது ஒன்றோ,இரண்டோ முறைதான். ஆனாலும் இன்றளவும் ஜன்னல் ஒர இருக்கைகளை காணும்பொழுது,கண்கள் தாமாக வியர்க்கத்தான் செய்கின்றன.
💗.வெகு நாள்களுக்கு பிறகு சொந்த ஊர் திரும்பிய நான்,எதிர்ச்சியாக எங்களது பள்ளி பேருந்தை கண்டேன். என்னை அறியாது ஏறிச்சென்று எனக்கே , உரித்தான இருக்கையில் அமர்ந்தேன்,வறுமை காரணமா? வருமானக்குறைவா? தெரியவில்லை, என்றோ அவள் பெயருடன்,என் பெயர் சேர்த்து கிறுக்கியது இன்றளவும் இருந்தது, என்னை எனக்கே ஞாபக படுத்தும் விதமாக.
💗.யார் மீதும் கோபம் கொள்ளாது,பார்த்து பார்த்து நடந்து கொள்ளும் எனக்கு,என் மீது மட்டும் ஏன் தன்னை தானே காயப்படுத்தி கொள்ளுமளவிற்கு அதீத கோபமென்று தெரியவில்லை,
- ந.மகேந்திரன்

0 Comments